Tuesday, January 27, 2015

த்ரிஷாவுக்கு ஒரு திறந்த மடல் ஆதிரா ஆனந்த்

No comments :
அன்பே த்ரிஷா,
நீ எப்படிப்பட்டவள் என்று நினைத்து உன் வருங்கால கணவர் கவலைப்படுவாரோ இல்லையோ, நமது இணைய போராளிகள் ரொம்பவே கவலைப் படுகிறார்கள். உனக்கு கல்யாணம் என்ற செய்தி கேட்ட நாள் தொட்டு அவர்கள் விடும் கதைகளும், புனைவுகளும் சிலிர்ப்படைய செய்கிறது.
நம் இந்தியச் சமூகத்தை பொறுத்தவரை ஒரு மூணாவது மனுஷி எப்போதுமே தேவடியாளாகத்தான் இருப்பாள். அந்தக் கணிப்பை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது என்னை வியக்க வைக்கிறது. கணிப்பு என்று கூட சொல்ல முடியாது.
இது ஒருவிதமான ஆற்றாமையின் வெளிப்பாடு. ஆனால் இதற்கு முன்னர் யாரென்றே தெரியாத பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொண்டு அவள்தான் சுத்த பத்தினி என்பார்கள். கடவுளைப் போல இதுவும் ஒருவிதமான நம்பிக்கைதான். தாயைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்தான் தெய்வம். அவரைப் பற்றி ஏதாவது பேசினாலே கோபம் மூக்கின் மேல் வந்து நின்றுவிடும். ஆனால் மூணாவது மனுஷி தேவடியாள்தான்.

ஒரு நாள் அவளும் யாரோ ஒருவருக்கு தாயாகவோ, தாரமாகவோ ஆகப்போகிறார் என்பதை யாரும் அறியாமல் இல்லை. இவனைப் பொறுத்தவரை அவன் மனைவி தேவடியாள். அவனைப் பொறுத்த வரை இவன் மனைவி தேவடியாள். இப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.
எங்களைப் பொறுத்த வரை டிவியில் பார்க்க, ரசிக்க, சுய இன்பம் அனுபவிக்க எல்லாத்துக்கும் ஒரு நடிகை வேண்டும். ஆனால் கல்யாணம் என்று வந்துவிட்டால் போதும் மாற்றி மாற்றி ஏதாவது கதைகட்டி திட்டி, காசுக்காக, பேருக்காக, என்றெல்லாம் சொல்லி அனுப்பி வைப்போம். ஒரு நடிகனால் 60 வயது வரை நடிகனாகவே நடிக்க முடியும்போது நடிகையை 25 வயதுக்கு மேல் புறந்தள்ளிவிடும் உலகம் இது.
ஒரு முறை நடிகை சோனா பேட்டி கொடுத்தார், “நான் நடிக்க மட்டுமே திரைத்துறைக்கு வந்திருக்கிறேன். வேறெதற்கும் அல்ல” என்று. அதைக் கேட்டு நம் ஆட்கள் எழுதுகிறார்கள். “கத்திரிக்காயை கடைத் தெருவில் வைத்துவிட்டு விற்பதற்கு இல்லை என்கிறாயே”. அவ்வளவு அபத்தம்.
திரையில் தோன்றுபவர் அனைவருமே அப்படியானவர் என்ற முடிவை இவர்கள் எப்போதோ எடுத்துவிட்டார்கள். எனவே இவர்களை ஒரு ஆளாக மதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உன்னுடைய சாதனையான நீண்ட காலம் சினிமாவில் இருந்த நடிகை என்ற பெருமையை இது மாதிரியான சமூகத்தில் உடைப்பது மிக மிக சிரமமான காரியமாகவே இருக்கும். சினிமாவைப் போலவே நீ இல்லறத்திலும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

No comments :

Post a Comment